கிளிநொச்சியில் 50 வீடுகள் அமைக்க சிறிதரனின் முயற்சியால் அடிக்கல்!
கிளிநொச்சி மாவட்டத்தில் 50 வீடுகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் முயற்சியால் 50 குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் –
கிளிநொச்சி மாவட்டம் சுனாமியாலும் யுத்தத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் எமது மாவட்டத்தில் உள்ள மக்கள் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தமும் எமது மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
இதன் காரணமாக நான், வீடமைப்பு அதிகாரசபை அமைச்சர் சஜித் பிரேமதாசவைகிளிநொச்சிக்கு அழைத்து, அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தேன். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சஜித் பிரேமதாசா உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தனது செயலாளருக்குப் பணித்ததுடன், தனது பிறந்தநாளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு ஏற்பாடுசெய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி அவரது பிறந்த தினத்திலே இந்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் நொந்துபோன எமது மக்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். எமது மக்களின் நிலைமையை உணர்ந்து வீடுகள் அமைப்பதற்கு உடனடியாக ஆவனசெய்தமைக்காக அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். – என்றார்.
இந்த நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபையின் செயலாளர், ஆளுநரின் செயலாளர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment