தமிழருக்கு மட்டுமன்றி சகல மக்களுக்கும் சம அதிகாரம் வழங்க வேண்டும்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்குள்ள முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரமும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை உருவாகக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.  மட்டக்களப்பு – ஏறாவூர் எல்லை நகர் பீ.என்.ஏ. விளையாட்டுக் கழகம்மற்றும் ஐக்கிய இளைஞர் கழகம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இக்கருத்துக்களை அவர் வெளியிட்டார்.  
பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 
இந்த நாடு ஒரு இனத்துக்குரிய நாடல்ல. நாட்டிலுள்ள சகல பிரஜைகளும் சுயநிர்ணய உரிமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்காகவே நாங்கள் அரசியல் தீர்வைக் கோருகின்றோம்.நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் ஏனைய தேசிய இனங்களை அடக்க முடியாது. தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்குமாகவிருத்தால் முஸ்லிம் மக்களுக்கும் அதிகாரம் சமமாக வழங்கப்பட வேண்டும். 
தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வை பெறும்போது முஸ்லிம்கள் தமது உரிமைக்காகப் போராடும் நிலை உருவாகக் கூடாது. இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் அவர்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இந்த நிலை ஏற்படுமாயின் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வோடு வாழ முடியும். 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வநாயகம் எந்தவொரு தீர்வையும் 'தமிழ் மக்களுக்கு" என்று கேட்கவில்லை 'தமிழ் பேசும் மக்களுக்குத் தீர்வு" வேண்டும் என்றே கோரினார். அதனடிப்படையில் கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முஸ்லிம் சகோதரர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில்  அமைச்சர் சஜித் பிரேமதாஸ எமது மக்களுக்காக எத்தனை வீடுகளை கட்டித்தருகிறார். இந்த சூழலை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 
 ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க நாங்கள் உதவினாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தூக்கியெறிந்து அற்ப சொற்ப சலுகைகளுக்காக  அமைச்சு பதவிகளைப் பெறமாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.