இனவாதத்துக்குள் சிக்கிய உத்தேச அரசியல் யாப்பு!
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது. இவ்வறிக்கையானது நாட்டின் பௌத்த உயர்பீடங்களான மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பார்வைக்காகவும் கையளிக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை பூர்த்தியடைந்துள்ள ஏற்பாடுகள் யாவும் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான அடித்தளங்கள் எனக் குறிப்பிடலாம். உத்தேச அரசியல் யாப்பை நோக்கிய அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது. அந்த நகர்வானது தடைகளைத் தாண்டிச் சென்றாலேயே புதிய அரசியல் யாப்பில் நம்பிக்கை கொள்ள முடியும்.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு குறைந்தபட்சத் தீர்வினையேனும் வழங்கக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகள் ஆரம்பமாகி மூன்று வருட காலம் கடந்து விட்டது. நல்லாட்சி அரசுக்குள் தோன்றிய கடுமையான முரண்பாடுகளும், அரசுக்கு எதிரான அரசியல் சக்திகளின் கடும் எதிர்ப்புகளும் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளை தாமதப்படுத்தி வந்திருக்கின்றன.
முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு, வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு தற்போது மூன்று வருட காலம் சென்று விட்டது. அன்றைய நல்லாட்சி அரசில் இதற்கான முட்டுக்கட்டைகள் இடப்படாது போயிருக்குமானால் புதிய அரசியல் யாப்பு கடந்த வருடத்திலானது நிறைவேறியிருக்கும்.
ஆனாலும் முரண்பாடுகள், தடைகள், தாமதங்கள், இழுத்தடிப்புகள் காரணமாக இதுவரை அரசியலமைப்பு வரைபுகூட தயாரிக்கப்படவில்லையென்பதுதான் கவலைக்குரிய விடயம்! இம்முயற்சியில் தடைகள் இன்னமும் நீங்கியபாடாக இல்லை. எனவே புதிய அரசியல் யாப்பு சாத்தியமாகுமா என்பது இன்னும் விடை காண முடியாத வினாவாகவே உள்ளது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, உத்தேச அரசியலமைப்புக்கான எதிர்ப்புகள் தென்னிலங்கையில் வலுவடைந்து வருகின்றன. உத்தேச யாப்பை எதிர்க்கின்ற அரசியல் சக்திகளை எடுத்துக் கொள்வோமானால் அச்சக்திகளெல்லாம் ஏதோவொரு வகையில் முன்னாள் ஜனாதிபதியும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் அணியுடன் தொடர்புடையனவாகவே காணப்படுகின்றன.
உத்தேச அரசியல் யாப்பு விடயத்தில் ஒட்டுமொத்த மஹிந்த தரப்பினருக்கும் இணக்கப்பாடு கிடையாதென்பது தெளிவாகி விட்டது. அத்தரப்பினர் புதிய அரசியல் யாப்பு மீதான தங்களது எதிர்ப்பை வெளிப்படையாகவே காண்பிக்கத் தொடங்கி விட்டனர்.
அவர்களது இன்றைய எதிர்ப்பானது கட்சியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படப் போவதில்லை. புதிய யாப்பை எதிர்க்கும் கருத்துகளை அவர்கள் தென்னிலங்கை எங்குமே தீவிரமாகப் பரப்பத்தான் போகின்றனர். அவர்கள் தற்போது தெரிவித்து வருகின்ற கருத்துகளுக்குள் இனவாதமே மேலோங்கியுள்ளதென்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
இலங்கை தனது அரசியல் வரலாற்றுப் பாதையிலிருந்து என்றுமே மீண்டும் வரப் போவதில்லை. அந்நியர் ஆட்சியிலிருந்து இந்நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இனவாதம் நிறைந்த அரசியல் பாதையிலேயே எமது நாடு பயணம் செய்த கொண்டிருக்கின்றது.
இனவாத சிந்தனையிலிருந்து மீட்சி பெற்று புதிய அரசியல் நாகரிகம் கொண்ட கலாசாரமொன்று உதயமாவது சாத்தியமான காரியமல்ல. ஏனெனில் எமது அரசியல்வாதிகளில் பெருமளவானவர்கள் இனவாத அரசியலிலேயே இன்னமும் பிழைப்பை நடத்திக் கொண்டிக்கிறார்கள்.
புதிய அரசியல் யாப்புக்கு எதிராக தென்னிலங்கையில் தற்போது உருவாகி வருகின்ற எதிர்ப்புகளை நாம் இவ்வாறுதான் நோக்க வேண்டியுள்ளது.
உத்தேச அரசியல் யாப்பினுள் உள்ளடக்கப்படப் போகின்ற அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகள் அனைத்துமே, வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வையே தரப் போகின்றன என்பதுதான் அரசியல்துறை நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.
வடக்கு, கிழக்குத் தமிழினம் கடந்த சுமார் அறுபது வருட காலமாகப் போராடி வந்த அரசியல் அதிகாரங்களில் மிகச் சொற்பமான உரிமைகளையே உத்தேச அரசியலமைப்பு கொண்டிருக்கப் போகின்றது என்பது தெளிவாகப் புரிந்து விட்டது.
ஆனாலும் வடக்கு, கிழக்கு தமிழினத்தைப் பொறுத்தவரை குறைந்த பட்சத் தீர்வையாவது ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு தெரிவுகள் எதுவுமே இன்றைய நிலையில் இல்லை. அரசியல் உரிமைகளைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்துப் பலங்களையுமே இழந்து நிக்கின்ற சமூகமொன்று, இன்னும் கூட அதிகபட்சத் தீர்வுகளுக்காகக் கனவு காண்பது ஏற்புடையதல்ல.
உத்தேச அரசியலமைப்பு சிறுபான்மை மக்களுக்கு வழங்கப் போகின்ற தீர்வானது தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப் போவதில்லையென்ற கண்டனங்கள் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தரப்புகளிடமிருந்து எழாமலில்லை ஆனாலும் புதிய யாப்பைத் தவிர தமிழினத்துக்கு மாற்றுவழியெதுவும் கிடையாதென்பதே யதார்த்தம்.
உண்மை நிலைமை இவ்வாறுள்ள போதிலும், தென்னிலங்கையில் தோன்றியுள்ள இனவாத கருத்துகள் வேறுவிதமாகவே அமைந்துள்ளன.
உத்தேச யாப்பானது சமஷ்டிக்கு நிகரான அம்சங்களை உள்ளடக்கியிருப்பதாகவும், நாடு பிளவடைவதற்கான சதியொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் அரசுக்கு எதிரான சக்திகள் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளன.
நாட்டில் சமீபத்தில் உருவான அரசியல் நெருக்கடியின் போது பிரதமர் ரணில் தலைமையிலான தரப்புக்கு ஆதரவு வழங்கியதற்குப் பிரதியுபகாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசு நன்றிக்கடன் செலுத்த முற்படுவதாக தெற்கில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய அரசியல் யாப்பையே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான பிரதியுபகாரமாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சிகள் ஒவ்வொன்றும் இனவாத ஆயுதம் கொண்டுதான் குழப்பியடிக்கப்பட்டுள்ளன. எமது நாட்டின் அரசியலில் இனவாதம் என்பது சக்தி மிகுந்ததொரு பெரும் ஆயுதம். நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதே இனவாதிகள்தான்!
அரசியல் தீர்வுக்கான மற்றொரு முயற்சியொன்று இனவாத எதிர்ப்புக்குள் இப்போது சிக்கிக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை!

Post a Comment