முதற்கட்டமாக 15 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உடனடி வேலைத்திட்டம்..! (படங்கள் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் முதற்கட்டமாக 15 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உடனடி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
 வடக்கைப் பிரதிநிதித்தவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகளினால் வடக்கில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டன. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன. தாமதமடைந்துள்ள வீடமைப்பு செயற்பாடுகள், காணி விடுவிப்பு பிரதான வீதிகளின் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டு;ள்ள தடங்கல்கள், முஸ்லீம் மக்களுக்கான மீள்குடியேற்றம், வைத்தியர்கள் வெற்றிடம், நெடுந்தீவிற்கான பல்வேறு தேவைகள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது,  பதிலளித்த பிரதமர் பெரியளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில், உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பிரதமரால் உரிய அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு பணிப்புரைவிடுத்தார். 
வீட்டுத்திட்டம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டன. தொடர்ந்தும், தாமதமாகி வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பில் அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர்.முதற்கட்டமாக, 15 ஆயிரம் வீடுகளிற்கான செயற்திட்டத்தை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்போது, மானிப்பாய், காரைநகர், குறிகட்டுவான் போன்ற பிரதான வீதிகளைப் புனரமைப்பது தொடர்பில் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் விளக்கமளித்த வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேற்படி வீதிகளைப் புனரமைப்பதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கென இந்தியாவில் இருந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு குழு இலங்கை வரவுள்ளதாகவும்; தெரிவித்தார். வடக்கிற்கான அதிவேக வீதி நிர்மாணிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பிரதமரிடம் விடயங்களை முன்வைத்தார். அதன் தாமதம் குறித்தும் அவர் பிரதமருக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது, குறிப்பிட்ட அமைச்சர்  ரிசாட் பதியுதீன் வடமாகாணத்திற்கான அதிவேக வீதிகள் நிர்மாணிப்பது தொடர்பாக 9 வேலைத்திட்டங்கள் மாவட்டங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்போது, குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் பல வருடங்களாக இது தொடர்பில் பேசப்படுகின்றது. எனினும், இன்னும் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். இதன்போது, எதிர்வரும் மே மாதத்தில் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்குப் பணிப்புரை விடுத்தார். பலாலி உட்பட அப்பகுதியின் பல்வேறு வீதிகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளமை தொடர்பில் மாவை சேனாதிராஜா எம்.பி கேள்வி எழுப்பிய போது, அப்பகுதியில் 500 கிலோ மீற்றர் வீதியே புனரமைப்புப் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் அமைச்சர் பதிலளித்தார்.
நெடுந்தீவு பிரதேசம் 5000 ற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டின் முக்கிய தீவாக இருக்கின்ற போதும், தொடந்தும், அபிவிருத்தியில் அப்பிரதேசம் மிக மோசமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றதாக சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். நெடுந்தீவிற்கு தனியான பிரதேச செயலகம் இயங்குகின்ற போதிலும், வீதிகள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் எந்த முன்னேற்றமும் இடம்பெறாமல் இருப்பது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். இதன்போது, பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண ஆளுநருடன் இணைந்து அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு பணிப்புரைவிடுத்தார்.
நெடுந்தீவில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்பில் குறிப்பிட்ட வடமாகாண ஆளுநர் இது ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், வடக்கில் மாத்திரம் 400 மருத்துவர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். மேற்படி வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென இந்நிகழ்வில், கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பதிலளித்தார். நெடுந்தீவிற்கான படகுச் சேவை தொடர்பிலும், அங்கு பணிபுரியும் வைத்தியர்களுக்கு வசதியாக படகு அம்புலன்ஸ் சேவையும் நடத்த வேண்டுமென சிறிதரன் எம்.பியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த வடக்கிற்குப் பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி தற்போது, கடற்படையினரால், படகுச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட சிறிதரன் எம்.பி.மேற்படி தீவில் படகுச் சேவைகளுக்கு கடற்படையை விடுத்து மாலுமிகள் பயிற்றுவிக்கப்பட்டால், அதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகுமே எனக் குறிப்பிட்டார். எவ்வாறெனினும், மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்;வு காணும் வகையில், வடமாகாண ஆளுநர் தலைமையில் குழு ஒன்று அங்கு சென்று ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும், பிரதமர் தெரிவித்தார். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.