யாழில் தொழில்நுட்ப பூங்காவை ஸ்தாபிப்பதற்கு இந்தியா உதவி
யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப இன்குயுபேட்டர்/அச்சிலேட்டர்ஸ் (incubators/ accelerators) என்பவற்றிற்கான ஒரு வர்த்தக மையத்தை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் 250 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவியினை மேற்கொள்ளவுள்ளது.
இது தொடர்பான புரிந்தணர்வு ஒப்பந்தமொன்று இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களிற்கு இடையில் இன்று வியாழக்கிழமை (21) பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளமான அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிக்கார ஆகியோர் கையொழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதி அமைச்சர் நளின் பண்டார, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோனதிராஜா மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவி இந்திரா மல்வத்த உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திச் செயல்திட்டங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பதிலான இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த செயல்திட்டம் அமைந்துள்ளது.
இந்த வர்த்தக மையம், வடக்கு பிரதேசத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய தொழில்சார் சேவைகள் என்பவற்றுக்கு இயலுமை கொண்டதான சுற்றாடலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு மேலதிகமாக, புனருத்தாரணம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான பல்வேறு அபிவிருத்தி செயல்திட்டங்களை மேற்கொண்டுவரும் இந்திய அரசாங்கம், இப்பிரதேசத்தில் மொத்தம் 46,000 வீடுகளை நிர்மாணித்தள்ளது.
இதற்கு மேலதிகமாக 1990 அவசரகால அம்பியுலன்ஸ் சேவைகள் மாகாணத்தில் செயற்பாட்டில் உள்ளது.
வட மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையத்தின் நிர்மாணித்தல், 27 பாடசாலைகளில் பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணித்தல், 3000 மழைநீர் சேகரிக்கும் தாங்கிகளின் நிர்மாணித்தல் 600 வீடுகள் உள்ளடங்கிய 25 மாதிரிக் கிராமங்களின் நிர்மாணித்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.
நாடு முழுவதிலுமாக 70 இற்கு மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி செயல்திட்டங்களை இந்தியா பூர்த்தி செய்துள்ளதுடன் அத்தகைய 20 செயல்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் அபிவிருத்தி உதவிகளுக்கான இந்தியாவின் மொத்தப் பற்றுறுதி சுமார் ருளுகூ 3 பில்லியன்களாக உள்ளதுடன், அவற்றுள் US$ 560 மில்லியன்கள் தனியே நன்கொடை அடிப்படையிலானவையாகும்.

Post a Comment