'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'


மொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். 
தமிழ் மக்கள் மத்தியில் தற்கொலைகள் மற்றும் போதைப் பாவனைகளை தடுக்கும் வகையில் ஆலயங்களில் உள்ள மதத் தலைவர்கள் ஆன்மீக ரீதியான நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டு கோள் விடுத்தார். 
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு அருள்மிகு ஸ்ரீ வாசுகி அம்மன் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமையானதும் முதலாவது வாசுகியம்மன் ஆலயமாகவும் உள்ள நெல்லிக்காடு அருள்மிகு ஸ்ரீ வாசுகி அம்மன் ஆலயத்தின் பாலஸ்தாபனம் அண்மையில் நடைபெற்ற நிலையில் புதிய ஆலய நிர்மாணப்பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
ஆலயத்தின் பரிபாலன சபைத் தலைவர்   உ.அருணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 
கம்பெரலிய திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பத்து இலட்சம் ரூபா நிதியை இந்த ஆலயத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். 
அத்துடன் புதிய ஆலய நிர்மாணப் பணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் ஆலயத்தின் பக்தர்களின் நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய   பாராளுமன்ற உறுப்பினர், இன்று மாணவர்கள் மத்தியில் போதைப்பாவனை அதிகரித்து வருகின்றது. மட்டக்களப்பில் பிரபல்ய பாடசாலை மாணவர்களும் கஞ்சாவுடன் பிடிபட்டுள்ளார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் இருள்மயமாகும் நிலையேற்படும். 
இன்று கல்லடி பாலம் தற்கொலை பாலமாக மாறிவருகின்றது.சிறிய பிரச்சினைக்கும் பாய்ந்து தற்கொலை செய்யும் நிலையுருவாகி வருகின்றது. மனதில் ஏற்படும் சிறியகோளாறே இதற்கு காரணமாகும். அது தவிர்க்கப்படுமானால் அவர்கள் வழமைக்கு திரும்பிவிடுவார்கள். அதற்கான ஆற்றுப்படுத்தல்களை ஆலயங்கள் செய்யவேண்டும். 
மதகுருமார்களுக்கு வழிகாட்டல்கள், ஆலோசனைகளை செய்யக்கூடிய தகுதி,தகைமை இருக்கின்றது.இந்துக்குருமார் ஆலயங்களில் பூஜைகளின் பின்னர் சமகாலத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலான அறிவுரைகளை மேற்கொண்டால் அது சமூகத்தினால் மதிக்கப்படும். 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மொட்டுக் கட்சியினர் தேர்தலுக்காக வந்துகொண்டிருக்கின்றார்கள். அவருக்கு வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சில சில்லறைகள் பல வடிவங்களில் செயற்படுகின்றன. 
கடந்த காலத்தில் கடத்தியது, காணாமலாக்கியது,நிலங்களை அபகரித்தது என பல்வேறுபட்ட அநியாயங்களை செய்தவர்கள் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் வருவார்கள்.  அவர்களிடம் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.