தேசிய அரசில் சு.க. மீளவும் சங்கமம்!
தேசிய அரசு அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு பட்டியல் அனுப்பிவைத்துள்ளது.
இந்தத் தகவலை கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லிமிர்ர் வெளியிட்டுள்ளது.
அரசியல் நெருக்கடியின் போது ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகிய நால்வருக்குமே அமைச்சுப் பதவி வழங்க ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கும் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதில்லை என மகிந்த தரப்பு உறுதியாகவுள்ளது. அதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய அரசை அமைக்க ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஜனாதிபதியால் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தேசிய அரசை உருவாக்கி தற்போது 30 பேரைக் கொண்ட அமைச்சரவையை 45-48 பேர் வரை அதிகரிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்துள்ளது. புதிய அமைச்சரவையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நால்வரை முதல்கட்டமாக இணைப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியுடன் சுமார் 5 மாதங்களின் பின் மீளவும் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளதாக ஜனாதிபதியின் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment