யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கத்தின் வரவு, செலவுத்திட்டம் அமைந்துள்ளது-பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்


சபைக்கு தலைமை தாங்கும் சபாநாயகர் அவர்களே!

வரவு, செலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்தமைக்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கத்தின் வரவு, செலவுத்திட்டம் அமைந்துள்ளது. யுத்தப்பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கைச்சேர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப தொடர்ச்சியாக போராடி வரும் நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இதனை நன்கு உணர்ந்து வரவு, செலவுத்திட்டத்தில் பல்வேறு யோசனைகளை உள்வாங்கியுள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும். 

யுத்தத்தில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்த வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு யுத்தப் பாதிப்புக்குள்ளான வடக்கு, மாகாணங்கள் விசேட திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவேண்டியது இன்றியமையாததாகும். இதனை உணர்ந்து கடந்த நான்கு வருடகாலமாக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. 

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் யுத்தத்தினால் வீடுவாசல்கள், நிர்மூலமாக்கப்பட்டன. இதன் காரணமாக இன்னமும் 1 இலட்சத்து 65 ஆயிரம் வீடுகள் அமைக்கவேண்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் இதுவரை வீடமைப்புப் பணியினை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனைமுன்னிட்டு இந்த வரவு, செலவுத்திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 15 ஆயிரம் செங்கற்களிலான வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே 4500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வரவு, செலவுத்திட்டத்தில் 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டுக்காக நிதி அமைச்சருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. பொருத்துவீடுகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பின்னர் கல்வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அமைச்சரவை அங்கீகாரம் பல தடவை பெறப்பட்டும் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்தநிலையில் தற்போதாவது இந்த வீடுகளை அமைக்க துரிதகதியில் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமானதாகும். 


யுத்தப்பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிக்க முடியாது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எமது அரசாங்க காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்தது. அந்த கொடுப்பனவு வரவு செலவுத்திட்டத்தில் 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கொடுப்பனவுக்காக 72 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்காக 4320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க செயற்பாடாகும். 
வடக்கு, கிழக்கில் மாற்றுத்திறனாளிகள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை சமூகம் புறக்கணிக்கும் நிலைமை காணப்படுகின்றது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவியை அதிகரித்ததுடன் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தமைக்காக நிதி அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கின்றேன். 


யுத்தத்தினால் வடக்கு, கிழக்கில் கைத்தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலைகள் சேதமாக்கப்பட்டிருந்தன. தற்போது கூட யுத்தப்பாதிப்புக்குள்ளான தொழிற்சாலைகள் இன்னமும் மீளத்திறக்கப்படாத நிலைமை அங்கு காணப்படுகின்றது. இந்த நிலையை கருத்தில் கொண்டு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் காங்கேசன்துறை, மாந்தை கிழக்கு, பரந்தன், கொண்டச்சி, கிண்னியா, சம்மாந்துறை, மற்றும் திருகோணமலையில் கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குவதற்கான யோசனைகளும் வரவு, செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும். கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதன் மூலமே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். எனவே இந்த கைத்தொழில் பேட்டைகளை இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்க முழுமுயற்சி எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 


யுத்தத்தினால் வடக்கில் பொதுக்கட்டடங்களும் அழிவடைந்ததுடன் சேதமாக்கப்பட்டன. நல்லாட்சி அரசாங்கமானது பல்வேறு புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்தும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரவு, செலவுத்திட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் அழிவடைந்த பழைய நகர மண்டபத்தை மீளமைப்பதற்கு 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கை குடாநாட்டு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் வரப்பிரசாதமாகும். 


இதேபோன்றே கல்முனை, சம்மாந்துறை, வாழைச்சேனை, மற்றும் தலைமன்னார் நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே யுத்தப்பாதிப்புக்குள்ளான இந்தப் பகுதிகளில் நகர அபிவிருத்தித் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கவேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும். 


வடக்கு, கிழக்கில் யுத்தப்பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். அத்துடன் யுத்தப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். இதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனை நோக்காகக்கொண்டு வரவு, செலவுத்திட்டத்தில் பல்வேறு யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான வேலைத்திட்டமானது அனைத்துப் பங்குதாரர்கள், மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்படும் என்று வரவு, செலவுத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் நிலைபேற்றுத்தன்மையை உறுதிசெய்வதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அவசியமானவையாகும். இந்த நோக்கத்திற்காக பிரதமரின் அலுவலகத்தில் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறை ஒருங்கிணைப்பு செயலகத்தின் மூலம் விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் பாராட்டத்தக்க செயற்பாடாகும்.

 
அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்திலும் அக்கறை செலுத்தவேண்டியுள்ளது. இதன் ஓரங்கமாக நட்டஈட்டு அலுவலக சட்டமூலமானது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரியாலயத்திற்கு அவசியமான ஆளனி மற்றும் உரிய வளங்கள் போதுமான அளவு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் வரவு, செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டள்ளது. 
இதனைவிட காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போதுமான வளங்களை பெற்றுக்கொடுக்கவும் காணாமல்போனோரின் குடும்பங்களுக்கும் உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோரது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் காணாமல்போனோரது குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று வரவு, செலவுத்திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். 


யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் காணமல் போனோர் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வுகாணப்படவில்லை. இதனால் காணாமல்போனோரது உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் தமது உறவுகளுக்கு நேர்ந்தகதி குறித்து அறியவிரும்புகின்றனர். இதனால்தான் போராடுகின்றனர். இந்த நிலையில் அரசாங்கமானது காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுவை அமைத்து தற்போது அதன் இடைக்கால யோசனைக்கு அமைய காணாமல்போனோரது பிரச்சினைக்கு தீர்வுகாணும்வரை அந்தக்குடும்பங்களுக்க 6000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் அரசாங்கம் முயற்சிக்கவேண்டியது அவசியமாக உள்ளது. 


வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியினை துரிதப்படும் முகமாக இரண்டு வருடகாலப்பகுதியில் ரூபா 5000 மில்லியன் முதலீட்டில் ''துரித அபிவிருத்திக்காக பனை நிதியம்'’ உருவாக்கப்படும். இதற்கு பங்களிப்பு செய்யுமாறு நலன்விரும்பிகள், கொடை வழங்குநர்கள், விசேடமாக புலம்பெயர்ந்து வாழ்வோர் ஆகியோரிடம் அழைப்பு விடுப்பதாக வரவு, செலவுத்திட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றது. திறைசேரியினால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பயன்படுத்தப்படும் இந்நிதியானது மதுபானம், மற்றும் போதைப் பொருள் பாவனை, இளைஞர் வேலையின்மை போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சிவில் சமூக உளவள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தி நிதியம் உருவாக்கப்படுவதற்கான யோசனை வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் போதைப்பொருள் பாவனை என்பது திட்டமிட்டவகையில் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரித்துகாணப்படுகின்றது. இவற்றுக்கு தீர்வை ஏற்படுத்த தக்க வகையில் நிதியம் செயற்படவேண்டும். இதற்கான பங்களிப்பை செய்யுமாறு புலம்பெயர்ந்து வாழ்வோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. 


புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இத்தகைய நிதியத்திற்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளனர். ஆனால் அவ்வாறு உதவிகளை பெறவேண்டுமானால் புலம்பெயர்ந்த மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். 
வடமாகாணத்தில் கள்ளுப்போத்தலில் அடைத்தல், மற்றும் கறுப்பட்டி உற்பத்தியினை கைத்தொழில் உற்பத்திகளாக உருவாக்குவதற்காக ஒருங்கிணைந்த கருத்திட்டம் ஒன்று கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் வடமாகணத்தில் உருவாக்கப்படும் என்றும் விவசாயிகள் மற்றும் சந்தைகளுக்கிடையிலான மிகவும் விணைத்திறன் மிக்க வர்த்தக இணைப்புக்களுக்கு வசதி அளிப்பதற்காக மத்திய பொருளாதார மையமொன்றுடன் இணைக்கப்பட்ட 10 துணைப்பொருளாதார நிலையங்கள் வடமாகாணத்தில் ஸ்தாபிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 


இதேபோன்றே வடக்கு, மற்றும் கிழக்கில் பகுதி அளவு நிர்மாணிக்கப்பட்ட அல்லது அழிவுற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்க ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நீர் மற்றும் மின்சாரம் போன்ற வசதிகளை வழங்குவதற்குமாக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான இந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க உரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவேண்டியது அவசியமானதாகும். 
வடக்கு, கிழக்கில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் மூன்றுமாத நிலுவையை விலக்களிப்பதற்கு எடுத்த தீர்மானமும் பராட்டத்தக்கதாகும். 


விவசாயதுறையில் அறுவடையின் பின்னரான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துவது அவசியமானதாகும். நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய வசதிகளைக் கொண்ட களஞ்சியசாலைகள் யாழ்ப்பாணம் உட்பட கட்டுநாயக்க, எம்பிலிப்பிட்டிய கெப்பிட்டிபொல ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இத்தகைய களஞ்சியசாலை அமைக்கப்படுவது இன்றியமையாததாகும். 


தேசிய ரீதியாகவும் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 5000 நோயாளர்களை உள்வாங்கும் வகையில் மாதாந்தம் 5000 ரூபா வழங்கும் திட்டம் வரவு, செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்றே அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைவிட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1600 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. தரம் ஒன்றை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மாதாந்த ஓய்வூதியம் 4600 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


நாட்டின் விலைவாசி அதிகரிப்பு காரணமாக அரசாங்க ஊழியர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது சம்பளம் ஓய்வூதியம் என்பன அதிகரிக்கப்பட்டமைக்காக நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ள போதிலும் அது ஜூலைமாத 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை ஜனவரிமாதம் முதல் வழங்கினால் அரசாங்க ஊழியர்களுக்கு அது பயனளிப்பதாக அமையும். இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். இதேபோன்றே தனியார் துறையினரும் வருமான அதிகரிப்பின்றி திண்டாடிவருகின்றனர். இந்த விடயம் தொடர்பிலும் வரவு, செலவுத்திட்டத்தில் யோசனைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அது சிறப்பாக அமைந்திருக்கும். 


நாட்டின் மலசலகூடம் இல்லாத வீடுகளுக்கு அவற்றை அமைத்துக்கொடுப்பதற்கும் வரவு, செலவுத்திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். 
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளக்கொடுப்பனவாக நாள் ஒன்றுக்கு 50 ரூபா வழங்கப்படும் என்றும் வரவு, செலவுத்திட்டத்தின் மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விடயம் இந்த திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மாறாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேயிலை சபையுடனான கலந்துரையாடல் மூலம் உடனடித் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடனடித் தீர்மானம் எடுத்து அந்த கொடுப்பனவை வழங்கவேண்டியது இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில் தோட்டத் தொழிலாளர்கள் உரிய சம்பளம் இன்றி பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு எதிர்காலத்திலாவது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழ் மொழிமூல ஆசிரியர் பயிற்சியினை ஊக்குவிப்பதற்கு தேசிய ஒருமைப்பாடு, அரசகருமமொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து கலாசார அமைச்சுக்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு கல்வித்துறை முன்னேற்றமடையவேண்டும். 

இதேபோன்றே வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் தமிழ்பேசும் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான தமிழ் மொழிபேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 
நாட்டில் நல்லிணக்கத்திற்கு வித்திடும் வகையிலும் யுத்தப்பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் வரவு,செலவுத்திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைவிட இன்னும் பல பிரச்சினைகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் அமையவேண்டும். 


52 நாள் அரசியல் புரட்சி நாட்டில் ஏற்பட்டிருக்காவிட்டால் இன்னும் சிறந்த சலுகைகளை கொண்ட வரவு, செலவுத்திட்டத்தை அரசாங்கத்தால் சமர்ப்பித்திருக்க முடியும். ஆனாலும் அந்த நெருக்கடிகளையும் தாண்டி நிதி அமைச்சர் சிறந்த வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளமைக்காக அவருக்கு பாராட்டைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.