மன்னாரில் முற்பதிவு காணிகளுக்கு பிற்பதிவும் ஏற்படும் நிலை இருப்பதால் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன்.



துரிதகதியில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படுகின்ற இவ் வேளையில் யுத்தத்தால் பாதிப்படைந்து மீள்குடியேறும் மக்களின் அதிகமானோரின் முற்பதிவுக் காணிகள் வேறொரு நபர்களின் பிற்பதிவுகளால் பாதிப்பு அடைந்து வரும் நிலையும் இங்கு காணப்படுவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றிசாட்டின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியூதின் இவ்வாறு தெரிவித்தார்.

ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்திலும்  நேற்று சனிக்கிழமை (16.03.2019) இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் பிரதிநிதியாக . முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றிசாட்டின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியூதின் கலந்து கொண்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

எந்த திட்டத்தையும் கனணி மயப்படுத்தப்பட்டு துரித வேலைத் திட்டமாக கொண்டு வந்தாலும் இதில் செயல்படுத்தும் ஊழியர்களோ அதிகாரிகளோ நல்லெண்ணம் கொண்டு கடமையில் அக்கறைக் கொண்டு செயல்படும்போதுதான் இவ் திட்டம் வெற்றி அளிக்கும்.

மக்களுடைய பிரச்சனைகளுக்கு துரிதகதியில் தீர்வு பெறவே இவ்வாறான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராம மட்டத்திலுள்ள கிராம அலுவலர்கள் தொடக்கம் மாவட்ட மட்டத்திலான அரசாங்க அதிபர் வரை மக்களுக்கு தொண்டாற்றும் அலுவலர்களாகவே இருக்கின்றனர்.

ஆகவே பொது மக்கள் பிரச்சனை என எம்மை நோக்கி வருகின்றபோது நாம் அவர்களுக்கு உதவி கரம் நீட்டுபவர்களாக இருக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் எல்லா வளங்களும் இருக்கின்றன. நில வளம் உண்டு. மனித வளம் உண்டு. இதன் மூலம் எமது மக்கள் நல்ல தொழில் வளத்தில் வளரக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றது.

ஆனால் இவைகள் இங்கு நிறைவாக இருந்தாலும் சட்டப்பிரச்சனைகளால் இவற்றை முன்னெடுத்துச் செல்வதில் பல சிக்கல்களும்' காணப்படுகின்றன.

இன்று ஒரு காணிக்கு பல  பத்திரங்கள் எழுதப்படுவதையும் நாம் காண்கின்றோம். எமது மன்னார் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் எல்லோரும் இவ் பிரச்சனைகளுக்கு உள்வாங்கப்பட்டவர்கள்தான்.

யுத்தத்துக்கு பின் முப்பது வருடங்களுக்கு பிறகு இவ் மக்கள் தங்கள் இடங்களுக்கு திரும்புகின்றபோது காணி பிரச்சனைகளுக்கு அதிகம் முகம் கொடுக்க வேண்டியவர்களாகவே காணப்படுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி என்னும் கிராமத்தில் 48 குடும்பங்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனால் இவர்களுக்கென சொந்த காணிகள் இல்லை.

ஆனால் அந்த கிராமத்தில் அரச காணிகள் காணப்படுகின்றன. இவ் காணியை அவ் மக்கள் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளுகின்றபோது அப் பகுதி கிராம அலவலர்கள் காவல் துறையினர் பாணியில் இவ் மக்களை நடாத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

நான் இங்கு தெரிவிப்பது கிராம அலுவலர்களை மனம் நோகப் பண்ணுவதற்காக அல்ல நாம் அடிமட்ட மக்களுக்கான தேவைகளை பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நபர்களாக இருக்க வேண்டும் என்பதையே இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.

மன்னாhரை பொறுத்தமட்டில் நிறைய காணிப்பிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றுக்கு தீர்வு ஏற்பட வேண்டுமானால் சட்டத்தரனிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது பல காணிகளின் முற்பதிவுகள் நீக்கப்பட்டு வேரு காணிகளுடன் சேர்க்கப்பட்டு தங்கள் சொந்த காணிகளையே பலர் இழந்து வரும் சம்பவங்களும் இங்கு காணப்படுகின்றன.

ஆகவே தற்பொழுது துரிதகதியில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் வேளையில் முற்பதிவு காணி உள்ளவர்கள் பாதிப்படையாத நிலையையும் பார்த்துக் கொள்வது சம்பந்தப்பட்டவர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.