தமிழ் கட்சிகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!!!
வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, நண்பர் திரு. டக்லஸ் தேவானந்தாவை இடைமறித்து நான் கூறிய சில கருத்துகள் தொடர்பாக அவரது கட்சிகாரர்கள் சிலர் என்னை விமர்சித்து சமூக தளங்களில் கருத்து கூறியுள்ளனர். இவர்களுக்கு பதில் சொல்ல எனக்கு எந்த வித கடப்பாடும் இல்லை. ஆனால், சமூக தளம் தவறாக வழி நடத்தப்பட்டுவிடக்கூடாது என்பதால் இதோ!!!!
வரவு செலவு திட்ட விவாதத்தின் போது சபையில் உரையாற்றி கொண்டு இருந்த திரு. டக்லஸ் தேவானந்தா “காணாமல் ஆக்கப்பட்டோர்’ தொடர்பில் எல்லா அரசாங்கங்களையும் விமர்சித்தார். அப்போது அவரை இடைமறித்து “இன்றைய அரசு காலத்தில் எவரும் காணமல் போகவில்லை. இன்று நாம் விவாதிப்பது கடந்த காலங்களில் காணாமல் போனோர் பற்றியே” என அவருக்கு தெளிவுப்படுத்தினேன்.
நான், திரு. டக்லஸ் தேவானந்தாவுடன் சபையில் முரண்பட்டபோது சில கூட்டமைப்பு எம்பீக்களும் அவருடன் முரண்பட்டார்கள். அதற்கும் எனக்கும் தொடர்பில்லை.
உண்மையில் ஒரு தகவல் தரவு விளக்கமாகவே என் இடைமறித்தலை நான் செய்தேன். இன்றைய அரசு காலத்தில் எவரும் காணாமல் போகவில்லை என்பது ஒரு மறுக்க முடியாத தரவு அல்லவா? இன்று நாம் விவாதித்து கொண்டு இருப்பது, கடந்த காலங்களில், திரு. டக்லஸ் தேவானந்தா அமைச்சரவையில் இடம்பெற்ற காலம் உட்பட்ட எல்லா காலங்களிலும் காணாமல் போனோர் பற்றியல்லவா? இது ஒரு மறுக்க முடியாத தரவு அல்லவா?
இன்றைய அரசு தொடர்பில். எவ்வளவோ புகார்கள், பின்னடைவுகள் இருந்தாலும் கூட, இன்றைய அரசு காலத்தில் எவரும் காணாமல் போகவில்லை என்பது இன்று நாம் பெற்றுள்ள ஒரு இடைக்கால வெற்றியாகும். இந்த வெற்றியை பெற கடுமையாக உழைத்த ஒருவன் நான். என்னை பொறுத்தவரை இடைக்கால வெற்றிகளை பெற்று எம்மை திடப்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எப்போதும் இது என் திடமான கொள்கை. அவ்வளவுதான். இதைவிட இந்த அரசுக்கு நான் எந்த ஒரு சான்றிதலும் வழங்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்ற நான் முயல்வதாகவும் திரு. டக்லஸ் தேவானந்தா தரப்பினர் என்னை குற்றம் சாட்டுகின்றனர்.
உண்மையில், வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்து சபையில் இருக்கும் சில வங்குரோத்து அரசியல்வாதிகளை விட எனக்கு ஐதேக, ஸ்ரீலசுக உள்ளிட்ட அனைத்து தென்னிலங்கை கட்சிகள் பற்றி நன்கு தெரியும். கடந்த இருபது ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் என்னால் தெரிவிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வரும், என் கருத்து நிலைப்பாடுகளை கவனமாக கவனத்தில் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இது புரிய வேண்டும்.
சிறுபிள்ளைத்தனமான ஈபிடீபி-கூட்டமைப்பு-தமிழரசு கட்சி மட்ட மோதல் அரசியலுக்குள் நான் இல்லை. நான் இவற்றை கடந்தவன். ஈபிடீபி, தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்ப்பதைபோல் நான் குரோதமாக பார்ப்பதில்லை. அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈபிடீபியை பார்ப்பதைபோல் நான் குரோதமாக பார்ப்பதில்லை. கட்சிகளை பற்றிய எங்கள் நிலைப்பாடுகளை, நாம் எம் சொந்த அளவுக்கோல்களால் தீர்மானிக்கின்றோம். நாம் வேறு கட்சிகளிடமிருந்து கடன்வாங்கிய அளவுக்கோல்களால் எமது கொள்கைகளை தீர்மானிப்பது இல்லை.
ஐதேகவின் இனவாத வரலாறு பற்றி எனக்கு தெரியும். அதேபோல் தென்னிலங்கையின் அனைத்து கட்சிகளையும் எனக்கு தெரியும். இவற்றில் “இது மோசம்”, “இது பரவாயில்லை”, என்ற தரம் பிரிக்க முடியாது. எல்லாமே ஒரே இனவாத குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவர்களுடன் எங்களுக்கு “கொள்கை கூட்டு” என்று எதுவும் கிடையாது.
ஆக, தென்னிலங்கை அரசியல் யதார்த்தம் கருதி, “தேர்தல் கூட்டு” மட்டுமே உண்டு. அவர்கள் எங்களை பயன்படுத்த முயல்கிறார்கள். நாம் அவர்களை பயன்படுத்துகிறோம். இதுதான் எம் அரசியல் சுழியோட்டம். இவர்களுடன் சேர்ந்து சுழியோடி எமது இலக்குகளை நாம் படிப்படியாக அடைகிறோம். எமது இந்த வழிப்பாதை பற்றி நான் எப்போதும் தெளிவாக கூறி வந்துள்ளேன்.
நாம் ஐதேக அல்ல. ரணில் என் கட்சி தலைவர் அல்ல. அவர் எம் கூட்டணி தலைவர். என் கட்சியின், கூட்டணியின் தலைவர் நானே! ஆகவே ஐதேக செய்த பாவங்களை நாம் கழுவ முடியாது. அதேபோல் இலங்கை தமிழர் வரலாறு முழுக்க, ஈபிடீபி-கூட்டமைப்பு-தமிழரசு ஆகிய கட்சிகள் செய்த பாவங்களையும் வேறு எவரும் கழுவ முடியாது. வரலாற்று பிழைகளை கண்டறிந்து, தம்மை திருத்திக்கொண்டு, அவரவரே கழுவிக்கொள்ள வேண்டியதுதான்.
சமீபத்தில் யாழ்ப்பாணம் வந்து கம்பன் விழாவில் பின்வரும் கருத்தை நான் பகிரங்க மேடையில் கூறிவிட்டு வந்தேன்.
“தனி ஒரு நாட்டையே கேட்ட தமிழர், இன்று மாகாணம், மாவட்டம், பிரதேசம் என்று சுருங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று நாடு முழுக்க தமிழரின் இருப்புக்கு சவால்கள் தோன்றியுள்ளன. எமது நிலம், காணி, மதம், மொழி, கலாச்சாரம், விழுமியங்கள், வரலாறு, இப்போது இருக்கும் குறைந்தபட்ச அரசியல் உரிமைகள் ஆகியவை சவால்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி, வடகிழக்கு இணைப்புடன் சமஷ்டி, வடகிழக்கு இணைப்பின்றி சமஷ்டி, பதின்மூன்று ப்ளஸ், பதின்மூன்றாம் திருத்தம் என தீர்வுகள் பலவாறாக விவரிக்கப்படலாம்"
"ஆனால், மொழியிழந்து, நிலமிழந்து, கலையிழந்து இந்நாட்டில் தமிழர், சிறுபான்மையினரிலும் மிகச்சிறிய ஒரு சிறுபான்மையினராக ஆக்கப்பட்டால் யாருக்காக தீர்வு? எதற்காக தீர்வு? ஏன் தீர்வு? கண்கள் போன பிறகு சித்திரம் வந்து என்ன பயன்? இலங்கை வரலாற்றில் எமக்குரிய அங்கீகாரம் உட்பட அனைத்தும் திரிக்கப்படுகின்றன. தமிழரும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சார விழுமியங்களும், தமிழர் வரலாறும் நிலைத்து இருந்தால்தான், எந்த ஒரு தீர்வு வந்தாலும் அது பயன் தரும்"
"ஆகவே நாம் எதிர்கொள்ளும் அபாயத்தை தடுக்க நாம் தமிழர் அனைவரும் கட்சி, மத, பிரதேச, ஜாதி பேதங்களை மறந்து ஒன்று சேர வேண்டும்”
இந்த கருத்துகளை அங்குள்ள எல்லா தமிழ் அரசியல் கட்சிகளையும், இயக்கங்களையும் நோக்கித்தான் சொன்னேன். இவை தமிழ் கட்சிகளுக்கு, தமிழ் தலைவர்களுக்கு புரியவில்லை என்றால், தமிழ் கட்சிகளையும், இக்கட்சிகளை நம்பி வாக்களிக்கும் தமிழ் மக்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!
Post a Comment