களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…
களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (08) இடம்பெற்றது.
இன்று பிற்பகல் களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் வரலாற்றில் மகளிர் பொலிஸ் படையணியொன்று பயிற்சியை நிறைவு செய்து பிரிந்து செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 586 மகளிர் கான்ஸ்டபிள்கள் மற்றும் 27 உதவி பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 616 பேர் இன்றைய தினம் பிரிந்து சென்றனர்.
விசேட திறமைகளை வெளிக்காட்டிய மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டதோடு, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





Post a Comment