பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தொடரும் மீராவோடை புதன் வாராந்த சந்தை
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
மீராவோடை பொதுச்சந்தையில் இடம்பெற்று வரும் புதன் வாராந்த சந்தையால் தாம் பாதிக்கப்படுவதாகவும் நாளாந்த சந்தையாக மாற்றுமாறு கோரியும் கடந்த 18.02.2029 ம் திகதி திங்கட்கிழமை ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு, பிரதேச சபையின் நுழைவாயிலை மறித்து பிரதேச சபை தலையிட்டு தீர்வினைப்பெற்றுத்தருமாறும் கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று 19.02.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை இது தொடர்பிலான அவசரத்தீர்மானமொன்றினை மேற்கொண்டு இன்று இடம்பெறும் புதன் வாராந்த சந்தையை நிறுத்துவதற்கான அழுத்த கொடுக்கப்பட்ட போதும், உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் பிரகாரம் விடுமுறை தினங்களில் அவசரக்கூட்டங்களை நடாத்த முடியாது என்ற காரணத்தினாலும் அவ்வாறு அவசரக்கூட்டங்களை நடாத்துவதாக இருந்தால், ஐந்து வேலை நாட்கள் அவகாசத்தில் விடுமுறை தினங்கள் அல்லாத நாட்களில் நடாத்தப்பட வேண்டும் எனும் சட்ட விதி முறைகளின் பிரகாரம் அவசரக்கூட்டமொன்றை புதன்கிழமைக்கு முன்னராக கூட்டி இன்றைய புதன் வாராந்த சந்தையை நிறுத்த எடுத்த முனைப்பு கைகூடாமல் போனது.
அதே நேரம், இன்று வாராந்த சந்தை இடம்பெறுமா? இல்லையா? என்ற பலத்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்த நிலையில், வழமை போன்று வாராந்த சந்தை இடம்பெறுகின்றது. மக்களும் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.
மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினரும் வாராந்த சந்தை முன்னணி செயற்பாட்டாளர்களும் களத்தில் நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
அதே நேரம், எதிர்வரும் 22.02.2019 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் வாராந்த சந்தை தொடர்பில் ஆராய்ந்து சுமூகமான தீர்வொன்றினை வழங்கும் நோக்கில் விஷேட பிரேரணையினைக் கொண்டு வருவதற்காக கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
அத்தோடு, வாராந்த சந்தையை தொடர்ந்தும் நடாத்தும் வகையிலும் எந்தத்தரப்பினரும் பாதிக்கப்படாத வகையிலும் சமூகமான தீர்வொன்றை உள்ளூர் அரசியல் தலைமை என்ற வகையிலும் இப்பிரதேச ஒட்டுமொத்த மக்களின் தவிசாளர் என்ற வகையிலும் மேற்கொள்வார் என்ற நம்பிக்கையும் அவ்வாறான சுமூகமான தீர்வொன்றுக்கு மக்கள் பிரதிநிதிகளான ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கட்சி பிரதேச வேறுபாடின்றி ஆதரவளிப்பார்கள் என்ற பலத்த எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம், வாராந்தை சந்தையை காரணமாக வைத்து எந்தத்தரப்பினரும் மறைமுக அரசியல் அஜந்தாவை உள் நுழைக்கும் கைங்கரியங்களை தயவு செய்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பது சகல மட்டத்தினரதும் வேண்டுகோளாகும்.

Post a Comment