-மன்னார் கடற்பரப்புக்குள் மீண்டும் இந்திய இலுவைப்படகுகள் அத்துமீறல். முன்னார் மீனவர்கள் பாதிப்பு. பிரதமர் கூட்டத்தில் முறையீடு
மன்னார் கடல்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட இந்திய படகுகள் விடுவிக்கப்பட்டபின் மீண்டும் இந்திய இலுவைப்படகுகள் மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளதுடன் மீனவர்களின் வலைகளையும் நாசம் செய்யத் தொடங்கியுள்ளன என பிரதமரின் கூட்டத்தில் புகார்.
வெள்ளிக் கிழமை (15.02.2019) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் கூட்டத்தில் அமைச்சர்களான றிசாட் பதியுதீன், வஐpகர அபேவர்த்தன, பி.ஹரிசன், விஐயகலா மகேஸ்வரன், புத்திரபத்திரன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பொதுவிடயங்கள் சம்பந்தமாக உரையாடப்பட்டபோது இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பந்தமான பிரச்சனை மீனவ சமூக பிரதிநிதியால் இவ் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
அதாவது முன்பு இந்திய இலுவைப் படகு மீனவர்கள் அத்துமீறி மன்னார் கடல் பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தபொழுது கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்பொழுது அண்மைகாலமாக மீண்டும் இந்திய இலுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்கின்றன. மன்னார் கடற்கரையிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் வந்து தங்கள் தொழிலை மேற்கொள்வதால் எமது கடல் வளம் சுரண்டப்படுவது ஒருபுறமிருக்க மன்னார் சிறு மீன்பிடியாளர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது கடற்படையினர் முன்னையது போன்று இந்திய மீனவர்களை கைது செய்வதில் அக்கறை காட்டுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வேளையில் கருத்து தெரிவிக்கையில் கடந்த வாரம் பேசாலை மீனவர்கள் இந்திய இலுவைப் படகுகளின் அத்துமீறல் தொழிலால் பெரும் பாதிப்புக்குள்ளாகியதாக தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது என தெரிவித்ததுடன்
இந்திய இலுவைப் படகு மீனவர்கள் எமது கடற்கரையிலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் தொழில் செய்து வருகின்றபோது கடற்படையினர் ஏன் இப்பொழுது முன்னையதுபோன்று இவர்களுக்கு எதிராக செயல்படுவதில்லை என கேள்வி எழுப்பினார்.
கடற்படை அதிகாரிகளிடம் இவ் கேள்வியை எழுப்பியபோது அதற்கு கடற்படை அதிகாரி கருத்து தெரிவிக்கையில் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவப் படகுகள் விடுவிக்கப்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார்.
-ஆனால் இந்த பிரச்சனை பேசப்பட்டுக் கொண்டிருந்தபொழுது பிரதமர் கடற்படையினருக்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காது மௌனம் காத்துக் கொண்டிருந்தார்.
-ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதற்கான முடிவு ஒன்றை தெரிவிக்கும்படி பிரதமரை வேண்டிக் கொண்டபொழுது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருடன் பேசிக்கொள்வோம் என்றார்.
(வாஸ் கூஞ்ஞ)

Post a Comment