வடகிழக்கு ஆளுனர்களே! உங்களுக்கான எனது தூது


-முஜீபுர் ரஹ்மான். பி.எம்-
வடகிழக்கு ஆளுனர்களே! முப்பது வருட யுத்தம் வடகிழக்கை மயான பூமியாக மாற்றியது. அங்கு வாழ்பவர்களை மயான பூமியில் நல்லடக்கம் செய்துள்ளது. அங்கு நடமாடித்திரிபவர்கள் மயான பூமியின் நடைப்பிணமாக அலைந்து திரிகிறார்கள். இதனை நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு நீங்கள் ஒன்றும் அறியாதவர்கள் இல்லை.
உங்கள் இருவரையும் எனக்கு நன்கு தெரியும். அதேபோல் என்னையும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் கலாநிதிகள் கல்வித் துறை மற்றும் அரசியல் துறையில் நீண்டகால அனுபவம் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். இருந்தும் வடக்கைச் சேர்ந்தவன் என்ற முறையில் உங்களுக்கு ஒரு ஞாபகமூட்டல் செய்வது எனது கடமை என்பதால் இதனை வரைகிறேன்.
ஜனாதிபதியின் பிரதிநிதிகள்
நீங்கள் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஏக பிரதிநிதிகள். உங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று கூற என் மனம் மறுக்கிறது. அதேபோல் இலங்கை அரசியல் யாப்பும் மறுக்கிறது. மேலும், நீங்கள் மத்திய அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள். மத்திய அரசு இடுகின்ற கட்டளைகளை, மன்னிக்க வேண்டும், மத்திய அரசு என்று சொல்வதைவிட ஜனாதிபதி இடுகின்ற கட்டளைகளை அப்படியே பின்பற்றுகின்ற செயற்படுத்தின்ற ஜனாதிபதியின் ஏவல்களை முன்னெடுக்கின்ற செயல்வீரர்கள்.
எனவே, உங்களை மதிப்பிடுவதென்றால் ஜனாதிபதியை மதிப்பிட வேண்டும். ஜனாதிபதி எப்படிப்பட்டவர்? அவரின் அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமைகிறது? ஜனாதிபதிக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எவ்வாறு சட்டம் ஒழுங்கு, யாப்பு என்பவற்றை மதிக்கின்றார்? போன்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலாக அமைகிறீர்கள். ஜனாதிபதி எதனைச் செய்வாரே அதனையே நீங்களும் செய்வீர்கள் என்பது குறித்து சில கேள்விள் எழுகின்றன. அதற்கான பதில் எதுவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது.
ஓராண்டு காலப் பதவி
ஆனால், நீங்கள் சிறந்த செயல் வீரர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இது உங்களுக்குக் கிடைத்த தங்கமான பரிசு. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் ஓர் ஆண்டு வரை தான் பதவியிலிருக்கப் போகிறார். அவர் கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் யாப்புக்கு முரணாக ஜனநாயக விரோத செயற்பாடு ஒன்றைச் செய்தார். இறுதியில் உச்ச நீதிமன்றம் அவரை யாப்புக்குப் பொறுப்புக்கூற வைத்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆனால், இந்த ஆளுனர் நியமனத்தை நோக்குகின்றபோது, 2018 ஒக்டோபரில் நடந்த ஜனநாயக விரோத ஆட்சிக் கவிழ்ப்புக்கு யார் யார் சதகமாகவும், ஒத்துழைப்பாகவும் இருந்தார்களோ அவர்களுக்கு வழங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும், முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகள் அவருக்கு எதிராக செயற்பட்டமையும் இந்நியமனத்திற்கு பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும், நீங்கள் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில், 30 வருட யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு மாகாணத்திற்கு அம்மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களில் ஒருவராக இருந்து அம்மக்களுக்காக சேவை செய்யக் கூடிய ஒருவரை இதுவரை அளுனராக நியமிக்கவில்லை.
இது உங்களது உழைப்புக்கும், நேர்மைக்கும் உங்களுக்குக் கிடைத்த பரிசு அது ஒரு அரிய சந்தர்ப்பம். அதனை வரவேற்கிறேன். எனவே, இந்த ஒரு வருட காலத்திற்குள் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மயான பூமியாக காணப்படுகின்ற தாயக பூமியை மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி பூமியாக மாற்றுவீர்கள் என நம்புகிறேன்.
உங்களுக்கான விடயங்கள்
விஷேடமாக வடகிழக்கு ஆளுனர்கள் இருவரும் சந்திப்பொன்றை மேற்கொள்ளுங்கள். அதில் வடகிழக்குக்கான சிறந்த செயற்திட்டம் ஒன்றை முன்மொழியுங்கள். அதில் நாளாந்தம் சிதைவடைந்து வரும் தமிழ் – முஸ்லிம் உறவை வளர்ப்பதற்காக ஒரு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க முன்மொழியுங்கள். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.
பிரதானமாக வடகிழக்கில் பாரிய காணிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. மாகாண சபைக்குக் கீழ் உள்ள காணி அதிகாரத்தைப் பயன்படுத்தியும் மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியும் இம்மக்களின் காணிப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை நான் உங்களுக்கு உணர்த்தத் தேவை இல்லை என நினைக்கிறேன்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் வடக்கு கிழக்கில் உள்ள காணிகளில் காணப்படும் சகல பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து விடுவிப்பதாக 2018 ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஜனாதிபதி கூறியதாக ஊடகப் பிரிவு தெரிவித்திருந்த்து. ஆனால், 2019 ஆம் ஆண்டின் முதலாம் (ஜனவரி) மாதமும் நிறைவுறப் போகின்றது. ஜனாதிபதியின் இக்கூற்றுக்கு இதுவரை எந்த முன்னெடுப்பும் இல்லை. எனவே, ஜனாதிபதியின் இந்தத் திட்டத்தை உடனடியாக முன்னெடுப்பீர்கள் என நம்புகிறேன்.
யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகி, பல இழப்புக்களை சந்தித்து, பிரதேசமற்றவர்களாக இன்னும் சரியான தீர்வின்றி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வடக்கு முஸ்லிம்களில் நிரந்த மீள்குடியேற்றத்திற்கு அழகிய வழிமுறை மற்றும் தீர்வொன்றை ஏற்படுத்துமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், 1990 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களில் இதுவரை சுமார் 40 வீதமானவர்களே மீள்குடியேறியுள்ளர்கள். ஏனையவர்கள் தொடர்ந்தும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலேயே வாழ்கிறார்கள். வடக்கே இவர்களதும் தாயக பூமி.
நீங்கள் சிறந்த சிந்தனையாளர்கள், கல்வியலாளர்கள், யுத்தம் எத்தனையோ சிறார்களின் வாழ்வை சீரழித்துள்ளது. அதாவது, யுத்தத்தினால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்துள்ளது. அக்குடும்ப சுமையை சுமக்க முடியாத பெண்கள் தங்களது பிள்ளைகளின் வாழ்வையும் அவர்களின் எதிர்காலத்தையும் இழக்கிறார்கள். எனவே, யுத்தம் தந்த பரிசான அனாதைச் சிறார்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள். அவ்வாறு சீரழியும் சிறார்களுக்காகவும், மொத்தத்தில் சிறந்த கல்வி முறைகள் இன்றி காணப்படும் வடகிழக்குப் பிரதேசங்களுக்கு இனத்துவ பாகுபாடின்றி சமத்துவ அடிப்படையில் சிறந்த கல்வித் திட்டம் ஒன்றை முன்னெடுத்து, முன்னுதாரணமாக நடந்து காட்டுக்கள்.
இவைகளுக்கு அப்பால், யுத்தத்தின் இன்னுமொரு அகோரம்தான் காணாமலாக்கப்பட்டோர். தனது கணவனைத் தேடி நாளாந்தம் எத்தனையோ பெண்கள் அலைகிறார்கள். அவ்வாறே, தனது பிள்ளையைத் தேடி பல ஆயிரம் தாய்மார்கள் நாளாந்தம் சிறைச்சாலை ஏறி இறங்குகிறார்கள். அதேபோல் அண்ணனை இழந்த சகோதரிகள் அண்ணனை விடுவிக்கக் கோரி வீதி ஓரங்களில் நாளாந்தம் போராட்டம் நடத்துகிறார்கள். இவைகளுக்கு நீங்கள் இருவரும் நினைத்தால் நிச்சயமாக நியாயமான தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க முடியும். இதனை சிறந்த முறையில் தீர்த்து வைக்குமாறு உங்களை இரு கரம் கூப்பிக் கேட்கிறேன்.
இப்பிரதேசங்களில் சுகாதாரம் பாரிய பிரச்சினையாக உள்ளது. அதிகமான பகுதிகள் காடுகளாக காணப்படுகின்றன. அப்பகுதியில் பல விசப் பாம்புகள் இருக்கின்றன. அவ்வாறு பாம்புக் கடிக்கு ஒருவர் உட்பட்டார் அவருக்கான உடனடி சிகிச்சை செய்வதற்கு போதிய சுகாதார வசதிகள் இல்லை. அதேநேரம், கிராமப் புரங்களில் போதிய போக்குவரத்துகளும் இல்லை. எனவே, பிராந்திய ஆஸ்பத்திரிகளை முடியுமான வழிகளில் அபிவிருத்தி செய்வது ஏழை மக்களுக்கு மிகவும் சிறந்த சேவையாகும்.
இப்பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரம் அனைத்து பிரதேசங்களிலும் தலைவிரித்தாடுகிறது. அண்மையில், இளைஞர்களைப் பாதிக்கக் கூடிய “அயிஸ்“ எனும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் போதைப் பொருள் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு, கே.ஜெ என்கின்ற கேரள கஞ்சா ஒவ்வொரு மாதமும் இப்பிரதேசங்களில் கைப்பற்றப்படுகின்றது. எனவே, இவைகளில் இருந்து இஞைர்களைப் பாதுகாக்க முயற்சிப்பீர்கள் என நம்புகிறோம்.
இவைகளுக்கு அப்பால், வடகிழக்கு அபிவிருத்தி மற்றும் தொழில்களான மீன்பிடி, விவசாயம் என்பன பாரிய பிரச்சினைக்கு உட்பட்டது. இந்திய மீனவர்களின் வருகை மற்றும் தற்போதும் நடைமுறையிலுள்ள கடற்படையினரின் அனுமதி பத்திரம் பெறும் நடைமுறை. இவைகளுக்கு சிறந்த தீர்வொன்றை வழங்குவது இம்மக்களின் வாழ்வதாரத்திற்கு பாரிய பங்களிப்புச் செய்யும்.
அத்தோடு, வடகிழக்கு மாகாணம் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவர்களின் வரிப்பணமும் இம்மாகாண அபிவிருத்திற்கு ஒத்துழைக்கின்றது. எனவே, நீர்ப்பாசன வழிமுறைகள் என்பவற்றை முடியுமான வழிகளில் சிறப்பாக மேற்கொள்ளலாம். மேலும், கால்நடை வேளாண்மை செய்யும் பெரும்பாலான தொழிலாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக சில பிரதேசங்களை ஒதுக்கிக் கொடுப்பது விவசாயத்தையும் கால்நடையையும் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்கும்.
இவைகளுக்கு முக்கிய தடையாக இருப்பது ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானியாகும். அவ்வர்த்தமானி மூலம் வடகிழக்கில் பல இலட்சம் ஏக்கர் காணிகளை காடுகளுக்கு சொந்தமாக்கியுள்ளார். அதேபோல், பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பாதுகாப்புப் படையினரிடம் இருக்கின்றது. இவைகள் மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்கு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இதனை விடுவிப்பதற்கு உங்களின் நெருங்கியவராக ஜனாதிபதி இருப்பதால் இதற்கான தீர்வினை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கலாம். இது வடகிழக்கு மக்களின் காட்டுத் தொழிலையும் பாதிக்கின்றது. இம்மக்கள் விறகுகள், தேன் மற்றும் பல தேவைகளுக்காக காடுகளுக்குச் செல்கிறார்கள். இவைகள் அனைத்தையும் இவ்வர்த்தமானி அறிவித்தல் தடுத்துள்ளது.
இறுதியாக, அனைத்துக்கும் தீர்வாக வடகிழக்கிலுள்ள நிர்வாக சீர்கேடுகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இங்கு எங்கு பார்த்தாலும் இனத்துவம் மற்றும் அரசியல் தலைவிரித்தாடுகிறது. இதற்கு ஏதாவது ஒரு சிறந்த வழிமுறையை ஏற்படுத்தினால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அதன் மூலம் பல்லினத்தன்மை மிக்க ஓர் அழகிய வடகிழக்கை அடையலாம். மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தலாம். இவைகளில் முன்னெடுப்பீர்கள் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.