மத நல்லிணக்கமும் மன்னார் சமூகமும்!!!
கடந்த 30 வருட யுத்தம் இலங்கைக்கு பாரிய பின்னடைவைத் தந்துள்ளது. அதிலும் வடமாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும். யுத்தத்தின் பின்னர் வடமாகாணம் பல அபிவிருத்திகளைக் கண்டுவருகின்றது. ஆனால், வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் மன்னார் மாவட்டமே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
வன்னிப் பெரும் நிலப்பரப்பிலேயே (முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம்) பாரியளவு யுத்தம் நடைபெற்ற பிரதேசமாக காணப்படுகின்றது. ஆனால், மனிதப் புதைகுழிகள் அதிகம் உள்ள மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. (திருக்கேதீஸ்வர புதைகுழி, மன்னார் சதோஸ கட்டிடத்தில் காணப்பட்ட புதைகுழி) எனவே, அதிக இழப்புக்களை சந்தித்த மாவட்டமாக மன்னார் மாவட்டம் இருக்கலாம் என்ற அவதானிப்பு இருக்கின்றது.
பல இழப்புக்களை சந்தித்த, பல உயிர்களைப் பலிகொடுத்த மன்னார் மாவட்டம் யுத்தம் நிறைவுற்றதன் பின்னராவது ஓரளவு திருப்திகரமான வாழ்க்கையை வாழ முயற்சிக்கின்றனர். ஆனால், போதிய நீர்ப்பாசன வசதி இன்றி விவசாயிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். அதேபோல், இந்திய மீனவர்களின் வருகையினால் மீன்பிடித் தொழிலாளிகள் பல அசௌகரிகங்களை எதிர்நோக்குகிறார்கள்.
இவைகளுக்கு அப்பால், கல்வி மற்றும் கலாசாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கியே செல்கின்றது.
அதேபோல், எமது சமூக நல்லிணக்கம் சகவாழ்வு என்பதனை எங்கிருந்து பேசுவது என்பதே தெரியாமல் தவிக்கிறேன். கிறிஸ்தவ – ஹிந்து மக்களுக்கிடையில் பிரச்சினை, கிறிஸ்தவ – முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சினை என்ற செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகிறது. இது எமது ஆரோக்கியத்திற்கு இன்னுமொரு சாபக்கேடு.
இதன் அடிப்படையில், அண்மையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஹிந்து ஆலயத்திற்கு செல்லும் நுழைவாயில் வழியில் வரவேற்பு கோபுரம் ஒன்றை அமைப்பதற்காக ஹிந்து ஆலய நிருவாக முன்னெடுத்தபோது, அதனை அங்கிருந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சொந்தமான மக்கள் சேதப்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அதில், கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்னால் ஹிந்து ஆலய நுழைவாயில் கோபுரத்தை அமைப்பது சிறந்த செயற்பாடாக இருக்காது, எனவே, அதனை சற்று உள்ளே கொண்டு சென்று ஹிந்து ஆலயத்திற்கு அருகாமையில் அமைப்பது சிறப்பாக இருக்கும் என்று இம்மக்கள் கூறியுள்ளனர். இறுதியில் அது கலவரமாக மாறி, தற்போது தற்காலிக தீர்வோடு பிரச்சினை நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மன்னாரில் பல இடங்களில் சமூகங்களுக்கிடையில் பல பிரச்சினைகள் எழுந்து கொண்டே இருக்கின்றது. எழுகின்ற பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அதற்காக சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த நல்லிணக்கக் குழு ஒன்று இயங்குவது ஆரோக்கியமாகும்.
சமாதான, சகாழ்வின்றி தொடர்ந்தும் சமூகங்களை தவறான நோக்கில் வேற்றுக் கண்கொண்டு நோக்குகின்றபோது இவ்வாறான பல பிரச்சினைகள் எழுவதை தடுக்கவும் முடியாதுள்ளது.
எனவே, நடந்தவைகளை நடந்தவையாக வைத்துக் கொள்வோம். கடந்த கால நிகழ்வுகளை படிப்பினையாக எடுத்துக் கொண்டு, நிகழ்காலத்தை சிறந்த முறையில் ஒற்றுமையோடும், சகவாழ்வோடும், சகிப்புத்தன்மையோடும், புரிந்துணர்வோடும் வடிவமைப்போம், வாழ்வோம். அதன் மூலம் மன்னாரின் எதிர்காலம் சுபீட்சமானதாக அமையும். எமது எதிர்கால சந்ததியினருக்கு செழிப்பான, வளம்பொருந்திய மன்னார் தேசத்தை அன்பளிப்பாக கொடுப்போம்.
ஒற்றுமையாய் வாழ்வோம்
ஒற்றுமையே மன நிம்மதியை ஏற்படுத்தும்
மன நிம்மதியே நிகழ்காலத்தை வளம்படுத்தும்
நிகழ்காலம் வளமாக இருந்தாலம்,
எதிர்காலம் சுபீட்சமாகும்.
வாழ்க வளமுடன்
வளர்க சுபீட்சத்துடன்.
P.M. Mujeebur Rahman
Member
Zonal Task Force (Reconciliation Group)

Post a Comment