பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிப்பதற்கு உறுதிபூணுவோம்!!!
''சுறுசுறுப்பானதொரு பெண் அழகியதோர் உலகம் '’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வருடத்திற்கான மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. மகளிர் தினத்தைமுன்னிட்டு இந்த மாதம் முழுவதும் மகளிர் மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பெண்களை வலுவூட்டும் வகையிலான பல்வேறு வேலைத்திட்டங்களும் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 8ஆம் திகதி மகளிர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் அநுராதபுரம் சல்காது விளையாட்டு அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் பெண்கள் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றனர். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ள நிலையில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட இந்த குடும்பங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன. இதனைவிட யுத்தப்பாதிப்புக்குள்ளான பெருமளவான பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாது திண்டாடி வருகின்றனர். எனவே இத்தகைய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்படவேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்முறைகள் என்பனவும் தொடர்கதையாக மாறியிருக்கின்றன. குடும்ப வன்முறைகளாலும் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே பெண்கள் மீதான வன்முறைகைள கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதேபோன்றே அரசியலிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவேண்டியுள்ளது. இதனால்தான் உள்ளூராட்சி தேர்தலில் 25 வீத பெண்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல் சட்டமும் இதற்கேற்றவகையில் திருத்தி அமைக்கப்பட்டது. பெண்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் யுத்தப் பாதிப்புக்குள்ளான பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிப்பதற்கு நாம் உறுதிபூணுவோம்.
Post a Comment