கம்பஹா,ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த முயற்சி

வில்பத்து குறித்து பேசும் எவரும் வவுனியாவில் 3,000 ஏக்கர் வன பிரதேசத்தை துப்புரவு செய்து கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதி மக்களை குடியமர்த்த மேற்கொள்ளும் முயற்சிக்கு வாய் திறக்காதுள்ளதாக ஐ,தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். 30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசமே வன வள பிரதேசமாக வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இனவாதத்தை தூண்டுவதற்காக சில தரப்பினர் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு மற்றும் மகாவலி , சுற்றாடல் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வில்பத்து வனவளம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பிரதேசம் மன்னார் மாவட்டத்திற்கு அன்றி அநுராதபுரத்திற்கும் புத்தளத்திற்கும் உட்பட்ட பிரதேசமாகும். ஆனால் பொய்ப் பிரசாரங்கள் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.
1990 களில் வடக்கிலிருந்து புலிகளினால் துரத்தப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தெற்கில் குடியேறினார்கள். அவர்கள் ஏன் துரத்தப்பட்டார்கள்? என யாரும் பேசுவதில்லை. புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காததாலும் நாட்டை துண்டாட பங்களிக்காததாலும் அவர்கள் துரத்தப்பட்டார்கள். இன்று சுற்றாடல் குறித்து பேசுவோர் அந்த மக்கள் முகாம்களில் கஷ்டப்பட்ட போது உதவ முன்வரவில்லை.மனிதாபிமானத்துடன் செயற்படவில்லை. இது குறித்து வெட்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.