குடிப்பதற்கு நீர் இல்லை: மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள மாத்திரம் உள்ளதா?-மஹிந்த அணி கேள்வி!
குடிப்பதற்கு நாட்டில் நீர் இல்லாத நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள மாத்திரம் நீர் உள்ளதா என மஹிந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்கட்சி உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் எதிர்காலமாக காணப்படுகின்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள எப்படி உங்களால் முடிகின்றது எனவும் அவர் இதன்போது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக மாணவர்களினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். இதன்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதுகுறித்த ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பல்வேறு தரப்பினரும் அதற்கு கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Post a Comment