தலைவர் பதவிக்காக கட்சிகளை உடைத்துக்கொண்டு செல்கின்றவர்கள் அதிகம் – மஸ்தான் எம்.பி!!!


தலைவர் பதவிக்காக கட்சிகளை உடைத்துக்கொண்டு சென்று புதிய கட்சிகளை உருவாக்கி தலைவரையும் அவமானப்படுத்தும் நிலை காணப்படுகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் இந்திய வம்சாவளி மக்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட அகதேசிய முன்னேற்றக்கழகத்தின் முதலாவது மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் அதன் தலைவர் எம்.பி நடராஜா தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,ஏனது வெற்றிக்கு அதிகளவான மலையக மக்கள் வாக்களித்திருந்தனர் என்பதனை கூறிக்கொள்வதில் சந்தோசமடைகின்றேன்.
இந்த நிலையில் எத்தனை கட்சிகள் உருவாகினாலும் அவை மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டும். அதற்குரிய சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் தெரிவுகள் இடம்பெறவேண்டும். அந்த தெரிவுகளை ஏனைய கட்சிகள் எவ்வாறு தெரிவு செய்கின்றனவோ தெரிவில்லை ஆனால் நான் வன்னி மாவட்டத்தில் சுதந்திரகட்சியில் அதனை சரியாகவே தெரிவு செய்கின்றேன். 
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் முடிந்ததன் பின்னர் கூட்டுகள் உருவாக்க வேண்டும் அவை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று பல நாட்களாக அப்போது சுயேற்சையாக போட்டியிட்டு இரு ஆசனங்களை பெற்ற நடராஜா பேசிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களும் சேர்ந்து ஒரு பிரதேச சபையில் ஆட்சியை அமைப்போம் என்பதையிட்டு அப்போது சந்தோசமான விடயமாக இருந்தது.
ஆனால் கடைசி ஒரிரு மணித்தியாலங்களில் நடராஜா பின்வாங்கி விட்டார்கள். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த சபைக்கு நாங்கள் ஒரு மலையக தமிழரொருவரை உப தவிசாளராக நியமித்துள்ளோம். எங்களுக்குள் எவ்வளவு கட்சிகள் உருவாகினாலும் சரி முதலில் நாங்கள் ஒரு கொள்கையாளர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் கூட்டுக்கள் ஆரம்பத்தில் எவ்வாறு பேசப்பட்டதோ அதில் இருந்து நாங்கள் மாறவில்லை. ஆனால் ஒரு சுயேற்சையாக போட்டியிட்டு இரண்டு பிரதிநிதிகளை பெற்ற அவர்கள் இந்த நேரத்தில் மாறிவிட்டார்கள்.
அதற்கு என்ன சாதக பாதகம் என்பது எங்களுக்கு தெரியவில்லை. வருங்காலங்களில் நாங்கள் இந்த மக்களுக்காக செயற்பட வேண்டும். அந்த நேரத்தில் நியாயமாக செயற்பட்டிருக்கவேண்டும். கடைசி ஓரிரு மணித்தியாலங்களில் இவ்வாறு மாறுகின்றபோது எவ்வளவு பிரச்சனைகள் எமக்கு இருக்கின்றது என்பதனை உணரவேண்டும். எனினும் அந்த பிரச்சனைகளை நாங்கள் அப்போது சமாளித்தோம். 
மக்களை எதிர்பார்த்து கட்சிகளை உருவாக்குகின்றபோது எல்லா கட்சிகளிலும் எல்லா மக்களும் சுமூகமாக இருக்கும்போது இதனை குழப்பாமல் இருப்பதற்கும் பார்க்கவேண்டும். என்னை பொருத்தவரையில் சுதந்திரக்கட்சி வன்னி மாவட்டத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கு உரிய அந்தஸ்தை கொடுத்துள்ளது. இந்திய வம்சாவளி மக்களில் தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லீம்களும் இருக்கின்றார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை. பாலச்சந்திரனுக்கு இவை தெரியும். எனது தந்தையும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறுவதில் பெருமையடைகின்றேன். இந்திய வம்சாவளியாக இருந்தாலும் எம் பியாக இருந்துகொண்டு நான் எல்லா சமூகத்திற்காகவும் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றேன். அந்த அடிப்படையில் இனிவரும் காலங்களில் சமூகத்தை தாங்குவதற்காக கட்சிகள் இருக்கலாம். ஆனால் சமூகத்தை பிளவு படுத்தக்கூடாது.
வன்னி மாவட்டத்தில் இன நல்லுறவுகள் பேணப்பட்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். அதனை குழப்பாது கட்சிகள் எவ்வாறு மக்களின் உரிமைகளை பெறலாம் என முயல் வேண்டும். நடராஜா தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாக மாகாணசபை உறுப்பினராக இருந்தவர். ஆகவே எல்லா கட்சிகளும் அதற்குரிய அந்தஸ்தை கொடுத்திருக்கலாம் இதில் சில மாற்றங்களும் இருந்திருக்கலாம். ஆனால் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். எத்தனை கட்சிகள் வந்தாலும் தலைவர்கள் பிழை விடுகின்றபோது அதனை சுட்டிக்காட்டி திருத்துபவர்களாக இருக்கவேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் தங்கள் தேவையை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும். 
முஸ்லீம் கட்சிகளை பார்த்தால் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டது ஒரு கட்சி. நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது அதனை உருவாக்கியிருந்தார்கள். பின்னர் தலைமைத்துவத்திற்காக கட்சியை உடைத்துக்கொண்டு பலர் போனார்கள். அதனால் இன்று எத்தனையோ கட்சிகள் உள்ளது. தலைவர் பதவியை பெறுவதற்காக கட்சியை காட்டிக்கொடுத்தார்கள். அந்த தலைவரை அவமானப்படுத்துவார்கள். அந்த நிலை இருக்ககூடாது என தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.