சவூதி இளவரசர் MBS பாகிஸ்தான் விஜயம்.
ஆசிய நாடுகள் மூன்றிற்காக இராஜதந்திர சுற்றுப்பயணத்தின் முதற் கட்டமாக சவூதி இளவரசர் மூஹம்மத் பின் ஸல்மான் நேற்றைய தினம் (17) பாகிஸ்தான் வந்துள்ளார்.
சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரும், துணை பிரதமருமான இளவரசர் முஹம்மட் பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் வருகை தந்த விசேட விமானத்திற்கு பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் பாதுகாப்பு வழங்கியமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2017ம் ஆண்டு இளவரசராக முடிசூடப்பட்டபின் பாகிஸ்தானுக்கான அவரது முதல் விஜயத்தை கௌரவிக்கும் விதமாக நூர் கான் விமான தளத்தில் வைத்து 21-துப்பாக்கி வேட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலின் போது பெட்ரோலியம், சக்தி வளம், கனிமங்கள், விளையாட்டு மற்றும் பிற துறைசார் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
குறித்த முதலீட்டு ஒப்ந்தங்களின் பெறுமதி 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரியவருகின்றது. பாகிஸ்தன் அரசு தற்போது எதிர் நோக்கியுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் வேகம் குன்றிய உள்நாட்டு அபிவிருத்தி நிலைக்கு குறித்த முதலீடுகள் பாரிய மாற்றீடாக அமையும் என பொருளாதார விமர்சகர்கள் குறிப்புடுகின்றனர்.
இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் இன்று பாகிஸ்தானிய ஜனாதிபதி ஆரிப் அல்வி மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவெத் ஆகியவர்களை சந்தித்ததின் பின் பாகிஸ்தான் விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியா மற்றும் சீனா செல்ல ஏற்பாடாகியுள்ளது.

Post a Comment