இளம் பெண்ணின் இந்நாள் காதலனை வெட்டிக் கொன்ற முன்னாள் காதலன்! – திருமலையில் கொடூரம்
திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இன்று காலை இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் விவகார வாக்குவாதம் இறுதியில் வாள்வெட்டில் முடிந்தது.
இளம் பெண் ஒருத்தியின் முன்னாள் காதலனுக்கும் தற்போதைய காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தற்போதைய காதலனான திருகோணமலை – நீதிமன்ற வீதி, வில்லூன்றிப் பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஷ்டன் (வயது 21) என்வரே உயிரிழந்துள்ளார்.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தனுஷ்டனை வாளால் வெட்டிப் படுகொலை செய்த குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் டானியல் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் துறைமுகப் பொலிஸார், “குறித்த பெண், முன்னாள் காதலனை 5 வருடங்களாகக் காதலித்துவிட்டு இறுதியில் ஏமாற்றியுள்ளார். வாள் வெட்டில் பலியான இந்நாள் காதலனை குறித்த பெண் ஒரு மாதமாகக் காதலித்து வந்துள்ளார். தீவிர விசாரணைகளின் பின்னர் ஆசிரியை ஒருவரின் மகளான குறித்த பெண்ணையும் அழைத்து விசாரணை செய்வோம்” என்று குறிப்பிட்டனர்.

Post a Comment